×

தமிழகத்தை மிரட்டும் கனமழை: நவ.29ல் புதிய காற்றழுத்தம்: தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: தூத்துக்குடி, திருச்செந்தூர் வெள்ளக்காடானது: 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தெற்கு வங்கக் கடல் பகுதியில் 3 கிமீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் 15 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வருகிற 29ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளி மண்டல காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றின் திசை மாறுபாடு காரணமாக தற்போது அது வலுப்பெற வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மாவட்டங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்தது. நேற்று காலையில்  இருந்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததில் ஒரே நாளில் 170 மிமீ முதல் 220 மிமீ வரை மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 160 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர கடலூர், அரியலூர், டெல்டா  மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நல்ல  மழை பெய்தது. சென்னையில் காலையில் மழை கொட்டியது. பின்னர் வெயில் அடித்தது.  நேற்று மாலை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை  கொட்டியது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மிககனமழை கொட்டியது.  நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 6 மணி நேரம் பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பகலிலேயே இரவு போல் இருளடைந்ததால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன. தூத்துக்குடி மாவட்டத்திலும் காலை 9 மணிக்கு தொடங்கிய கனமழை மாலை வரை இடைவிடாது கொட்டியது. இந்த மழையால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. திருச்செந்தூர் சன்னதி தெருவில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வழி முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாழிக்கிணறு, கோயில் பிரகாரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை கொட்டியதால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 8 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 24 செ.மீட்டரும், திருச்செந்தூரில் 20 செ.மீட்டரும் மழை பதிவானது. கன மழை காரணமாக நேற்று மாலை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது.  குமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் காணப்பட்டது. அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக தண்ணீர் கொட்டுகிறது. மாவட்டத்தில் மேலும் 10 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்தநிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றுக்கு இயக்கப்படுகின்ற படகுகள் நேற்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மதுரை நகர் மற்றும் புறநகரில் நேற்று மதியம் துவங்கிய மழை, கனமழையாக வலுப்பெற்று தொடர்ந்து இரவு வரை பெய்தது. நகருக்குள் தாழ்வான இடங்களில தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காலை முதலே கனமழை விடாமல் பெய்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மதியம் துவங்கி திண்டுக்கல், நத்தம், பழநி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. கொடைக்கானலில், ஏரி நிரம்பி வழிவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பழநி நகரில் மாலை 3 மணிநேரத்திற்கு மேல் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. தொடர் கனமழை காரணமாக பழநி மலைக்கோயில் படிக்கட்டுகளில் மழைநீர் அருவிபோல் கொட்டியது. கோயிலுக்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். படிக்கட்டுகளில் நடந்து சென்ற பக்தர்கள் ஆங்காங்கே இருந்த நிழற்மண்டபங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மதியம் 2.30 மணிக்கு துவங்கி, மாலை 6.30 மணி வரை கனமழை தொடர்ந்தது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ராமநாதபுரம், தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு  சுழற்சி மேற்கு நோக்கி நகரும் என்பதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி,  தென்காசி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்.  மேலும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, மாவட்டங்களிலும்  பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான  மழை பெய்யும். 17ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை  பெய்யும். 28ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில்  மிக கனமழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,  திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம்,  நீலகிரி, கோவை, ஈரோடு டெல்டா  மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதையடுத்து, குமரிக்கடல், தென் மேற்கு  வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும், அதேபோல 27ம் தேதியும் சூறைக்காற்று  வீசும் என்பதால் இந்த இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  அறிவுறுத்தப்படுகின்றனர். தொடர்ந்து மழை பெய்துவருவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல்,  பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி,  கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவாரூர், திருச்சி, தஞ்சை  உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடை தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து விட்டு  விட்டு பெய்துவரும் மழையால் பூதலூர் அருகே சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர்  சலீம் (45), இவர், மனைவி ஷகிலா பானு (40), மகள் ரிஸ்வானா (14), மகன்  அசாருதீன் (5) ஆகிய 4 பேரும் வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு தூங்கிக்கொண்டு  இருந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து  சிறுவன் அசாருதீன் உயிரிழந்தான். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி  தப்பினர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை  ஊராட்சி பூங்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சிவபாக்கியம்(85) என்பவரின்  வீட்டு சுவர் நேற்றுமுன்தினம் இரவு இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள்  தனியாக தூங்கிய சிவபாக்கியம் இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

திருப்பத்தூர்  மாவட்டம் ஏ.கே மோட்டூர் பகுதி அண்ணா நகரை சேர்ந்தவர் முத்து,  கூலித்தொழிலாளி. இவரது மனைவி கண்மணி. இவர்களுக்கு சஞ்சனா(4) என்ற பெண்  குழந்தையும், 3 மாத குழந்தையும் உள்ளது. பக்கத்து வீட்டில் வசிப்பவர்  சுரேஷ். ஆட்டோ டிரவைர். இவரது மனைவி சத்யா. இவர்களது மகன் பிரஷாந்த்(2).  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ஏ.கே மோட்டூர் பகுதியில் உள்ள  பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் 1 மணி அளவில்  சிறுமி சஞ்சனாவும், சிறுவன் பிரஷாந்தும் பாம்பாற்றில் கலக்கும் ஓடை அருகே  விளையாட சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரோடையில்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு படை வீரர்கள் ரப்பர்  படகில் பாம்பாற்றில் கலக்கும் நீரோடையில் சுமார் ஒரு மணி நேரமாக தேடி 2  குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர்.

கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மூடல்
தொடர்மழையின் காரணமாக, கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை இன்று மூடுவதற்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதனால், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கனமழை காரணமாக கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறையை அடுத்த மன்னவனூர், கவுஞ்சி, போளூர், கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், புதுபுத்தூர் உள்ளிட்ட மேல் மலை கிராமங்கள் அனைத்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.

நள்ளிரவு புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ்
தென்மாவட்டங்களில் நேற்று கொட்டித் தீர்த்த மழை, தூத்துக்குடி மாவட்டத்தை புரட்டிப் போட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மதியத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மழையில் நனைந்தவாறே மாணவ, மாணவியர் வீடு திரும்பினர்.தூத்துக்குடி ரயில் நிலைய தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால், நேற்று மாலையில் அங்கிருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதன்படி நேற்று மாலை புறப்பட வேண்டிய தூத்துக்குடி- நெல்லை சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ்(எண்.16235), 4 மணி நேரம் தாமதமாக இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. தூத்துக்குடியில் இருந்து இரவு 8.15 க்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி- சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ்(எண்.12694), 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு சென்றது.

திருச்செந்தூர் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது
திருச்செந்தூரில் நேற்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை 6 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டியது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வடக்கு பிரகாரம், கிழக்கு பிரகாரத்தில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாழிக்கிணறு பகுதி வளாகம், சண்முக விலாசம், கோயில் உள்பிரகாரம் பகுதியில் வெள்ளம் புகுந்தது. மடையில் ஏற்பட்ட அடைப்பினால் மழைநீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கியது. அடைப்பை அகற்றியதை தொடர்ந்து கோயிலில் தேங்கி கிடந்த மழைநீர் கடலுக்கு சென்றது. இதனால் சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டனர். இதே போல் கோயிலுக்கு செல்லும் சன்னதி தெருவிலும் மழைநீர் குளம் போல் தேங்கிக் காணப்பட்டது.  கடந்த 1992ம் ஆண்டு புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, ஆத்தூர் தாமிரபரணி கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்த நேரத்தில் கூட திருச்செந்தூர் கோயிலுக்கு வெள்ளம் புகுந்ததில்லை. ஆனால் நேற்று பெய்த மழையில் திருச்செந்தூர் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது.


Tags : Tamil Nadu ,Thoothukudi ,Thiruchendur , Tamil Nadu, heavy rain, fresh air pressure, Red Alert
× RELATED தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிப்பு!!