×

தமிழகம் முழுவதும் விரைவில் 500 கலைஞர் உணவகம் திறப்பு: டெல்லி கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

புதுடெல்லி: ‘தமிழகத்தில் விரைவில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்,’ என்று தமிழக உணவுத்து றை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையல் அறை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஒன்றிய, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான ஆலோசனை கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட பிறகு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை, மக்களுக்கு உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு சிறப்பு விநியோக திட்டம், கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.978 கோடி செலவிலும், அதேப்போன்று தலா ரூ.4 ஆயிரம் ரொக்கத் தொகையும் கொரோனா பேரிடர் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி மாதம் 21 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,161 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 650 சமூக உணவகங்களை, அம்மா உணவகம் என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தி வருகின்றன.  

இதே போன்று 500 சமுதாய உணவகங்கள், ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில்தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும், விரிவுபடுத்தவும் ஒன்றிய அரசு நூறு சதவீத நிதி உதவி வழங்க வேண்டும். நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரி க்கை வைக்கப்பட்டது. அதன்படி, 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். அதேப்போல், தமிழகத்தில் அரைக்கப்படும் பச்சரிசியில் ஒரு லட்சம் டன்னை அருகிலுள்ள மாநிலங்களுக்கு இந்திய உணவு கழகத்தின் மூலம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக ஒரு லட்சம் டன் புழுங்கல் அரிசியை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Tamil Nadu ,Minister ,Chakrabarti ,Delhi , 500 artiste restaurants to open across Tamil Nadu soon: Minister Chakrabarti at a meeting in Delhi
× RELATED கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி...