முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 காங். எம்எல்ஏ.க்கள் திரிணாமுல்லுக்கு தாவல்: மேகாலயாவில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான மம்தா பானர்ஜி, இதர மாநிலங்களிலும் தனது கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். பாஜ.வுக்கு எதிராக அணி திரளும்படி மம்தா விடுத்த அழைப்பை ஏற்று, பல்வேறு கட்சிகளை சேர்ந்த மிக முக்கிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரசில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த 12 எம்எல்ஏ.க்கள் திடீரென கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி,  திரிணாமுல் காங்கிரசில் நேற்று இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  காங்கிரசுக்கு 18 எம்எல்ஏ.க்கள் இருந்தனர். இதன் சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா இருந்து வந்தார். இவர் தலைமையில்தான் இந்த கட்சித் தாவல் நடந்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல்  தோல்வியடைந்த திரிணாமுல் காங்கிரஸ், தற்போது பிரதான எதிர்க்கட்சி பலத்தை பெற்றுள்ளது. இம்மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த செப்டம்பரில் ஷில்லாங் மக்களவை தொகுதி எம்பி.யான வின்சென்ட் நியமிக்கப்பட்டார். இதில், முகுல் சங்கா கடும் அதிருப்தி அடைந்தார். இதன் எதிரொலியாகவே அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

* பிரசாந்த் கிஷோரின் வியூகமா?

மேகாலயா தேர்தலில் போட்டியிட உள்ள திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நேற்று முன்தினம் இரவு முகுல் சங்மா, கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். அதற்கு மறுநாள், இந்த கட்சித் தாவல் சம்பவம் நடந்துள்ளது.

Related Stories:

More