அரசு ஊழியர்களுக்கு பெற்றோரை குஷிப்படுத்த 4 நாள் தொடர் விடுமுறை: அசாம் அமைச்சரவை ஒப்புதல்

கவுகாத்தி: அசாமில் முதல்வர் ஹிமானந்தா பிஸ்வா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு இங்கு நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய அவர், அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பதற்காக கூடுதல் வார விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த கூடுதல் விடுமுறையை அளிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, அடுத்தாண்டு முதல் ஜனவரி முதல் வாரத்தில் சனி, ஞாயிறுடன் கூடுதலாக 2 நாள் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி. ஜனவரி 6, 7ம் தேதியும் விடுமுறையாகி உள்ளது. இதன் மூலம், மொத்தமாக 4 நாட்கள் கிடைப்பதால், அந்த நாட்களை தங்களின் வயதான பெற்றோர் அல்லது மாமியார், மாமனாருடன் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், இதர அரசு ஊழியர்கள் கட்டாயம் கழிக்க வேண்டும். அந்த நாட்களை அவர்களை சுற்றுலா அழைத்து செல்வதற்காக அல்லது வீட்டிலேயே அவர்களுடன் நேரத்தை செலவழிக்க பயன்படுத்த வேண்டும். வேறு எதற்கும் இந்த விடுமுறையை பயன்படுத்த முடியாது. அமைச்சர்கள் முழுவதுமாக விடுப்பு பெற முடியாது. சில மணி நேரங்கள் விடுப்பாக எடுத்துக் கொண்டு செல்லலாம்.

Related Stories: