×

மதுரை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலில் ரகசிய அறைகள் திறப்பு; சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டுபிடிப்பு

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள கருங்காலக்குடி திருச்சுனையில் 13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மார சுந்தரபாண்டிய மன்னரால், கட்டப்பட்ட அகஸ்தீஸ்வரன் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்டதாக திருக்கோயில் வரலாற்றில் உள்ளது. இக்கோயிலில் 1954, 1978 மற்றும் 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு இந்து அறநிலையத் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என சட்ட பேரவையில் அறிவித்தது. இதனை தொடர்ந்து 21 வருடத்திற்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கோயிலில் சிம்ம வாகனம், மூஷிக வாகனம், அஸ்வ வாகனம் உள்ளிட்டவை உள்ளதால், திருவிழா மற்றும் சுவாமி வீதி உலா காலங்களில் உலா வரும் மற்ற சாமி சிலைகள் கோயிலில் தான் இருக்க வேண்டும். அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என அப்போது கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்று மாவட்ட இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் விஜயன் உத்தரவின் பேரில், கோயிலில் உள்ள ரகசிய அறை மற்றும் பாதாள அறை ஆகியவை அறநிலைய துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வீடியோ பதிவுடன் கடப்பாரை உதவியுடன் நேற்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாதாள அறையில் பழமை வாய்ந்த விநாயகர், சிவன், அம்பாள், சண்டிகேஸ்வரர் போன்ற பித்தளை சிலைகள், சூலாயுதம், வேல், பீடம், தூபக்கால், மணி உட்பட 21 பூஜைக்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


Tags : Shiva temple ,Madurai ,Swami , Opening of secret rooms in a 13th century Shiva temple near Madurai; Discovery of Swami idols and worship items
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...