பெண் குழந்தைகளை பாதுகாத்திட மாவட்டம் தோறும் வாட்ஸ்அப் எண் அறிமுகம்; அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண் குழந்தைகள், மாணவியர்களை பாதுகாத்திடும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஸ்பிக்நகர் இன்னர்வீல் கிளப் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடந்தது.  நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியும் பேசினார்.

அவர் பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 15 நாட்களில், குழந்தை திருமணங்கள் தடுக்க வேண்டும், பெண் குழந்தைகளை பாலியல் குற்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பான புகார்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பெண் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவுடன் சமூக நலத்துறை இணைத்து பெண் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 6மாதங்களில் இதில் பதிவாகும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கல்வித்துறையுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு, தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவித்திட கலெக்டர் தலைமையில் 93748-10811 என்ற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணில், பெண் குழந்தைகள், மாணவியர்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த புகார்களை பதிவு செய்யலாம். புகார் தொடர்பான விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், குழந்தை திருமணம் தடுத்தல், பள்ளி கல்வியில் இடைநிற்றலை தடுத்து தொடர்ந்து கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என அனைத்து குற்ற நிகழ்வுகளையும் இந்த எண்ணில் பதிந்து உடனடியாக தீர்வு காணலாம்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் இதற்கான வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்ய உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories:

More