×

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை மையம்

தூத்துக்குடி: தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசியிலும் மிக பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி வரும் நிலையில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லை மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காயல்பட்டினத்தில் கடந்த 10 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எட்டயபுரம் - 19 செ.மீ, குலசேகரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டத்தில் 14 செ.மீ, சாத்தன்குளத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தூத்துக்குடியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 8 மணி நேரம் விடாது பெய்த கனமழையால் பிரைன் நகர், பி.என்.டி காலனியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர், மில்லர்புரம், தபால் தந்தி காலனி, ஸ்டேட் பேங்க் காலனி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. குடியிருப்பு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகினர். மில்லர்புரம் பகுதியில் தனியார் பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட இடங்களில் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மேலூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் 3 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. வல்லாளப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட கிராமங்களிலும் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

Tags : Dututapudi ,Nella ,Nalasai , Thoothukudi, Red Alert
× RELATED நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல்