உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிப்பதை எதிர்த்து மதுரை கப்பலூர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டம்

மதுரை: உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிப்பதை எதிர்த்து மதுரையை அடுத்துள்ள கப்பலூர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து சுமார் 3 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மதுரையில் இருந்து விருதுநகர் செல்லும் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் விதிமுறைகள் மீறி அமைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர் அனைத்து வாகனங்களும் சுங்கம் செலுத்த கோரியதால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம், ராஜபாளையம், செங்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுங்க நிர்வாகிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அடுத்த அறிவிப்பை வெளியிடும் வரை திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories: