×

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 451 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்ய அனுமதி; முடிவுற்றதும் குடமுழுக்கு.! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 451 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அவர்கள் பேசும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருக்கோயில்களின் மேம்பாடுத்துவது குறித்து மாதம்தோறும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் சீராய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் கலைஞர் தல மரக்கன்றுகள் திருக்கோயில்களில் நடப்பட்டு வருகின்றன. அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது போன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு அறிவிப்புகளும் சிறப்பாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு  வருகின்றது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ள வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட திருக்கோயில்களான சென்னை வடபழநி அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்.

மதுரை மாவட்டம் அருள்மிகு கூடழலகர் திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு குன்னவாக்கம் அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயில், வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருள்மிகு சென்றாயப் பெருமாள் திருக்கோயில், கோவை மாவட்டம் கோட்டை அருள்மிகு கங்கமேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை, சீர்காழி அருள்மிகு வீர நரசிம்மப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல், அருள்மிகு இரத்தின கீரீஸ்வரசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்  கோபுராபுரம் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சி மாவட்டம் இலால்குடி  அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் உட்பட 451 கோயில்களுக்கு ஆகம விதிபடி திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும். முக்கியமாக பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரூ. 250 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலும், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் ரூ.125 கோடி மதிப்பீட்டிலும் திருப்பணி செய்யப்படவுள்ளன. இப்பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும். 88 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் மற்றும் 32 மாவட்டங்களுக்கு மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்து விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறபட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு தகுதியுடைய அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

 சமீபத்தில் பெய்த மழையால் பல கோயிலில் தண்ணீர் தேங்கியிருந்த நீர் அகற்றப்பட்டு வருகிறது. திருத்தணிகை, திருச்செங்கோடு, திருநீர்மலை, திருச்சி மலைக்கோட்டை, திருக்கழுக்குன்றம் ஆகிய 5  மலைக்கோயில்களிலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் புதிய ரோப்கார் அமைக்க வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். திருக்கோயில் திருப்பணி, திருக்குளம், நந்தவனம், திருத்தேர் போன்ற பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாண்புமிக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 40 சிறிய கோயில்களின் திருக்குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மதுரவாயல் கைலாசநாதர் கோயிலில் புதிதாக குளம் அமைக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மாண்புமிகு முதல்வரின் கட்டுப்பாட்டில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்துறை வாயிலாக வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க  3087 திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை அமைக்க ரூ.308.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வடபழனி முருகன் கோவிலில் ஒரு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது, விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு அறை அமைக்கப்படும். ஓதுவார், அர்ச்சகர், வேத பாராயணம், நாதஸ்வரம் பயிற்சி  வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அந்தந்த திருக்கோயிலின் தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000/- மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிதி வசதி இல்லாத திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடத்துவதற்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு நிதியாக ரூ. 129/- கோடி ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டுள்ளார்கள். இதனால் சிறு கோயில்களிலும் தினந்தோறும் விளக்கு எறிகின்ற சூழ்நிலை உருவாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Tags : Treasury ,Minister ,Sekarbabu , Permission to renovate 451 temples under the control of the Treasury; When the end of the pitcher.! Information from Minister Sekarbabu
× RELATED முதலில் டோக்கன் வாங்கியது திமுக...