வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி ரூ.70க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.!

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தமிழகத்தில் சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை ரூ.30 முதல் ரூ.40 வரையில் குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.   தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. கனமழை காரணமாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் நெல் மற்றும் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால், சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்து. ரூ.180 வரையில் தக்காளியின் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மலைபோல் உயர்ந்த தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70 மற்றும் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்தநிலையில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளிகள் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டது. வழக்கமாக 30 வரையில் இருந்த லாரிகள் தற்போது தேவையை கருதி 40 முதல் 45 லாரிகள் வரை வரவழைக்கப்பட்டு தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தக்காளியின் விலை அதிரடியாக ரூ.30 முதல் ரூ.40 வரையில் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி  விலை ரூ.30 குறைந்தது. கோயம்பேடு சந்தையில் நேற்று முதல் ரக தக்காளி  கிலோவுக்கு ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.30  குறைந்து  கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையாகிறது.

இதேபோல், 2ம் ரக தக்காளி  ரூ.100ல் இருந்து ரூ.30 குறைந்து, ரூ.70க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து, கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘நேற்றைவிட தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, மொத்த விற்பனை கடையில் ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், சிறு வியாபாரிகள் கடைகளில் ரூ.100 வரையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விலை குறைய வாய்ப்புள்ளது. மழை குறைந்தால் கண்டிப்பாக விலையும் குறையும்’ என்றார்.

Related Stories:

More