சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

பொன்னேரி: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலை. சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு சென்றுவரும் மிக முக்கிய சாலை இது. இந்த சாலையில் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரில் திடீரென புகை வருவதை கண்ட காரின் உரிமையாளர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு காரை விட்டு அனைவரும் இறங்கியுள்ளனர். அந்த காரில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பயணித்துள்ளனர். புதுவாயல் என்ற இடத்தில் கார் வரும்போது அந்த காரில் தீப்பற்றியுள்ளது. இதனால் அலறி அடித்துக்கொண்டு அந்த 7 பேரும் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் கார் கொழுந்துவிட்டு தீப்பற்றி எரிந்து. இந்த தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்த காரை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு இந்த சென்னை - கொல்கத்தா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த காரில் பற்றிய தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து ஒரு எலும்பு கூடு போல காட்சியளிக்கிறது. எனினும் காரில் பயணித்த யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் பயணித்தவர்களின் விவரம் மற்றும் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் இந்த பகுதியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: