×

12 எம்எல்ஏக்களுடன் மேகாலயா மாஜி காங்கிரஸ் முதல்வர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.!

ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா. இவரது தலைமையில் 12 எம்எல்ஏக்கள், திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளனர். இதனால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், வெற்றி பெற இப்போதே பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டனர்.  

இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அமரீந்தர் அக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அதுபோல் கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் அந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு செல்ல வேட்பாளராகவும் திரிணாமுல் சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.

இந்நிலையில் மேகாலயாவில் முன்னாள் முதல்வரும் மேகாலயா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இங்கு வலிமையாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

தலைவர் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ், எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 பேரில் 12 பேர் திரிணமூல் காங்கிரசில் இணைந்துள்ளனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வின்சென்ட் எச்.பலாவுக்கும் முகுல் சங்மாவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது.

அதுபோல், ‘அக்கட்சியின் மாநில தலைவராக பலாவை நியமிப்பது குறித்து, தன்னிடம் கட்சி தலைமை ஆலோசிக்கவில்லை’ என முகுல் சங்மா குற்றம்சாட்டி வந்தார். அதனால், கட்சியில் இருந்து சங்மா எப்போது வேண்டுமானாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவுவார் என கணிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சங்மாவிடம், பிரசாந்த் கிஷோரின் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதையும் அவர் ஏற்கவில்லை என தெரிகிறது. கடந்த செப்டம்பரில் தலைநகர் ஷில்லாங்கில் நடந்த கூட்டத்தில்கூட சங்மா கூறுகையில், ‘கட்சியில் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியுள்ளது. அதை நிச்சயம் நான் செய்வேன்’ என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Meghalaya Maji ,Congress ,Trinamul Congress , Former Meghalaya Congress chief joins Trinamool Congress with 12 MLAs
× RELATED ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள்...