×

13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலின் ரகசிய அறைகள் திறப்பு: சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கண்டுபிடிப்பு

மேலூர்: மேலூர் அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற சிவன் கோயிலின் ரகசிய அறைகளை நேற்று திறந்த அறநிலைய துறை அதிகாரிகள், அங்கிருந்த சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை கண்டுபிடித்தனர். மேலூர் அருகில் உள்ள கருங்காலக்குடி திருச்சுனையில் 13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மார சுந்தரபாண்டிய மன்னரால், கட்டப்பட்ட அகஸ்தீஸ்வரன் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்டதாக திருக்கோயில் வரலாற்றில் உள்ளது. இக்கோயிலில் 1954,1978 மற்றும் 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இந்து அறநிலையத் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என சட்ட பேரவையில் அறிவித்தது. இதனை தொடர்ந்து 21 வருடத்திற்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கியது. கோயிலில் சிம்ம வாகனம், மூசிக வாகனம், அஸ்வ வாகனம் உள்ளிட்டவை உள்ளதால், திருவிழா மற்றும் சுவாமி வீதி உலா காலங்களில் உலாவரும் மற்ற சாமி சிலைகள் கோயிலில் தான் இருக்க வேண்டும். அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என அப்போது கோரிக்கை விடப்பட்டது.

இதனை ஏற்று நேற்று மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் விஜயன் உத்தரவின் பேரில், கோயிலில் உள்ள ரகசிய அறை மற்றும் பாதாள அறை ஆகியவை அறநிலைய துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வீடியோ பதிவுடன் கடப்பாறை உதவியுடன் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாதாள அறையில் பழமை வாய்ந்த விநாயகர், சிவன், அம்பாள், சண்டிகேஸ்வரர் போன்ற பித்தளை சிலைகள், சூலாயுதம், வேல், பீடம், தூபக்கால், மணி உட்பட 21 பூஜைக்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆபரணங்கள் மற்றும் எந்த ஆவணங்களும் இல்லை.
அறநிலைய துறை துணை ஆணையர் விஜயன் கூறியதாவது: இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், கோயிலில் உள்ள ரகசிய அறையை திறக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அந்த அறையில் சுவாமி, அம்பாள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆவணப்படுத்தி, கோயலில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலில் வேறு எந்த ரகசிய அறையும் கிடையாது என கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது மதுரை மாவட்ட அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யம்பிள்ளை, அதிகாரிகள், மேலூர் டிஎஸ்பி பிரபாகரன், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், சுகாதர துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Temple of Shiva ,Swami , Water supply, increase, Vaigai dam, water, discharge
× RELATED ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு