×

96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் காந்திய கொள்கைகளை பரப்ப சென்று விபத்தில் சிக்கி கை, கால் செயல் இழந்த பெண்: மருத்துவ, வாகன உதவியை எதிர்பார்க்கிறார்

கோபி: மதுரையைச் சேர்ந்த காந்தியவாதி தம்பதி கருப்பையா-சித்ரா. இவர்கள் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி குஜராத், பீஹார், ஒடிசா, காஷ்மீர், பஞ்சாப், வாகா என நாட்டின் பல்வேறு பகுதிகளை கடந்த 31 ஆண்டுகளாக மிதிவண்டி மற்றும் நடைபயணம் மேற்கொண்டு வந்தனர். இதுவரை 96 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை நடை பயணமாகவும், மித வண்டி பயணமாகவும் தம்பதியர்  கடந்துள்ளனர். இவர்கள் இந்திய சுதந்திர பவள விழாவினையொட்டி  கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சமர்ப்பண யாத்திரை என்ற பெயரில் ஒரு நடைப்பயணத்தினை சென்னிமலையில் தொடங்கி புதுச்சேரி நோக்கி பயணம் மேற்கொண்டனர். செப்டம்பர் மாதம் 11ம் தேதி பாரதியார் நினைவு நாள் அன்று புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடைபயணத்தை நிறைவு செய்யவும் இவர்கள் முடிவு செய்திருந்தனர், இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம்  தேதி நாமகிரிப்பேட்டை செல்லும்போது நாய்கள் கடித்ததில்  நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு சித்ரா படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்துவிட்டன.

விபத்தில் ஒரு கை மற்றும் கால் செயல் இழந்த நிலையில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 மாத சிகிச்சைக்கு பிறகு சித்ரா தற்போது கோபி அருகே உள்ள ஓடத்துறை என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் படுக்கையில் உள்ளார். விபத்தில் சிக்கி கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்த நிலையில் சித்ராவால் தனியாக எழுந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காந்தியவாதி கருப்பையா தனது மனைவிக்கு உதவியாக இருந்து வருகிறார். சித்ராவிற்கு  ஓடத்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தம்பதியினருக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள், அரசு வேலை, நிலம் போன்ற பலவும் வழங்க முன்வந்த போதிலும் காந்திய கொள்கையை மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சலுகைகளை மறுத்து வந்தனர். ஆனால் தற்போது படுக்கையில் உள்ள சித்ராவிற்கு அரசு சார்பில் மருத்துவ உதவியும், பேட்டரியால் இயங்கும் சக்கர வாகனமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Water supply, increase, Vaigai dam, water, discharge
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்...