×

வேலூர் விரிஞ்சிபுரத்தில் கடந்த 18ம்தேதி பாலாற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரரை தேடும் பணி தீவிரம்

வேலூர்: வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரரின் கதி என்ன? என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் அருகே உள்ள மேல்விளாச்சூரை சேர்ந்தவர் மனோகரன்(32), ராணுவ வீரர். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஒன்றரை வயது மற்றும் 8 மாதத்தில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மனோகரன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊர் வந்திருந்தார். கடந்த 18ம் தேதி விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை பைக்கில் கடந்தபோது, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். இதையறிந்த தீயணைப்புத்துறையினர், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தனித்தனியாக படகுகள் மூலம் தேடினர். ஆனால் ராணுவ வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் திருப்பதியில் இருந்து விமானப்படையை சேர்ந்த குரூப் கமாண்டர் சரண் உத்தரவின்பேரில், விமான படை குழுவினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்தனர்.
விரிஞ்சிபுரம் பாலாறு பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் வரையில் ஹெலிகாப்டர் மூலம் தேடியும், ராணுவவீரர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ராணுவ வீரரின் கதி என்ன என்பது தெரியாமல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் வேலூர் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் ராணுவ வீரரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் விரிஞ்சிபுரம் பாலாற்று கரையோரம் உள்ள பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பாலாற்றில் வெள்ளம் இன்னும் குறையாமல் உள்ளதால் இறங்கி தேடுதல் பணியை மேற்கொள்ளுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : Vellore Virinjipuram , palaru, flood
× RELATED குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று...