×

வேலூர்- ரகுநாதபுரம் செல்லும் அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை

வேலூர்: வேலூர்- ரகுநாதபுரம் செல்லும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதாகவும், தட்டிக்கேட்டால் மிரட்டுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அரசு பஸ் டிரைவர்கள் சிலர் கூட்டாக வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

வேலூரில் இருந்து ரகுநாதபுரம் செல்லும் (வழித்தடம் எண் 60) அரசு பஸ்சை நாங்கள் ஷிப்ட் முறையில் 13 ஆண்டுகளாக இயக்கி வருகிறோம். கடந்த 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சில் பயணிக்கின்றனர். அவர்கள் பஸ்சில் அமர இடம் இருந்தாலும் உள்ளே வராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர். எவ்வளவு அறிவுரை கூறினாலும் ஏற்க மறுக்கின்றனர். பஸ்சின் மேற்கூரை மீதும் ஏறி ரகளை செய்கின்றனர்.

இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் கர்ப்பிணிகளை கிண்டல் செய்கின்றனர். இதைக்கேட்டால் கண்டக்டர், டிரைவரை மிரட்டுகின்றனர். மேலும் பஸ்சை நிறுத்தி இறங்குமாறு கூறினாலும் எங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பது கிடையாது. கிராமப்புறத்தில் இருந்து வரும் பஸ்சில் பயணிகள் அதிகளவில் இருக்கின்றனர். மாணவிகளும் படியில் தொங்கி கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் செய்கையால் எங்களது பணிக்கு உரிய பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் படியில் மாணவர்கள் தொங்கினால் அதிகாரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். ஆர்டிஓ லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதாக கூறுகிறார். இதனால் எங்கள் பணிக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. எனவே பஸ் படியில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரல் வீடியோ- மாணவி படியில் பயணம்

வடுகன்தாங்கல் அருகே உள்ள ரகுநாதபுரம் என்ற கிராமத்தில் இருந்து அரசு பஸ் வேலூருக்கு இயக்கப்படுகிறது. குக்கிராமங்களை கொண்டு உள்ள இப்பகுதியில் காலை நேரங்களில் காட்பாடி- குடியாத்தம் சாலையில் உள்ள லத்தேரி, கரசமங்கலம், வடுகன்குட்டை போன்ற பஸ் நிறுத்தங்களில் இருந்து அதிகளவில் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பயணிக்கின்றனர். இதில் மாணவிகள் படியில் தொங்கியபடி  பயணம் செய்கின்றனர். மாணவர்களுக்கு இணையாக மாணவி ஒருவர் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து கழகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவியை பஸ்சிற்குள் ஏற்றாமல் இயக்கியது ஏன்?

வழக்கமாக மாணவர்கள் தான் பஸ்சில் இடம் இருந்தும், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வார்கள். ஆனால், மாணவி ஒருவர் பஸ்சில் இடம் இல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்யும் வீடியோ வைரலானது. மாணவி படிக்கட்டில் தொங்கியபடி வருவதை பார்த்து, அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர்கள்  பஸ்சை நிறுத்தி மாணவியை பஸ்சுக்குள் ஏற்றிய பின்னர் இயக்கி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் அலட்சியமாக இயக்கியது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Vellore-Ragunathapuram , Government bus
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...