இரு வாரங்களுக்கு பின் கேரளா சென்ற ரயில்கள் நெல்லை - திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்து தொடங்கியது

நெல்லை: குமரி மாவட்ட ரயில் தண்டவாளங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்பட்ட நிலையில், நெல்லை - திருவனந்தபுரம் இடையே ரயில் போக்குவரத்து நேற்று தொடங்கியது. அனந்தபுரி மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் நேற்று கேரளாவுக்கு சென்றன. நாகர்கோவில் - திருவ னந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை, பள்ளியாடி அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் கடந்த 12ம் தேதி முதல் அம்மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரளாவுக்கு செல்லும் குருவாயூர் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டன. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லத்திற்கு செல்ல வழியில்லாததால், தினமும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது. மதுரை - புனலூர் எக்ஸ்பிரசும், நெல்லையில் இருந்து மதுரை வரை மட்டுமே இயக்கப்பட்டது.இந்நிலையில் குமரிமாவட்டத்தில் குழித்துறை மற்றும் பள்ளியாடி ரயில் தண்டவாளங்களை சரி செய்யும் பணிகள் நிறைவு பெற்றன.

அத்தண்டவாளத்தில் காலி பெட்டிகள் அடங்கிய எலக்ட்ரிக் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர். மேலும் எலக்ட்ரிக் லைன்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டன. ஆய்வு நடத்திய அதிகாரிகள் ரயில்களை இயக்கிட அனுமதி அளித்தனர். இதையடுத்து இரு வாரங்களுக்கு பின் நேற்று காலையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லத்திற்கும், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கும் இயக்கப்பட்டது. இரவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் வழியாக குருவாயூருக்கு இயக்கப்பட்டது. மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே நெல்லையோடு நிறுத்தப்பட்டு, நெல்லையில் இருந்து மீண்டும் இயக்கப்பட்டது. புனலூர் எக்ஸ்பிரசும் இன்று முதல் கேரளா செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை - திருவனந்தபுரம் வழித்தடம் சீரானதால் பயணிகள் மகிழ்ச்சியோடு நேற்று கேரளாவுக்கு பயணித்தனர்.

Related Stories: