நாளுக்கு நாள் உயரும் நூல் விலை: ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்..!!

திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை விசைத்தறி மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி மட்டும் ஒரேநாளில் கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 10 மாதங்களில் அனைத்து நூல்களின் விலையும் கிலோவுக்கு 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதனை கண்டித்து திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனங்கள் மாவட்டம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த டீமா, சைமா உள்ளிட்ட தொழில் அமைப்புகள், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன் முடிவில் முழு அடைப்பு போராட்டத்தின் போது பருத்தி ஏற்றுமதியை தடை செய்து நூல் விலை உயர்வுக்கு தீர்வுகாண வேண்டும் என ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்போம் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜவுளி தொழிலை பாதுகாக்கக்கோரி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ, தமிழ்நாடு மாநிலக்குழு தமது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

Related Stories: