×

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை நியமிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: ‘ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது,’ என அப்போலோ மருத்துமவனையின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதன் விசாரணைக்கு தடை விதிக்கும்படி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனை மேல்முறையீடு செய்தது.

நேற்று முன்தினம் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த விதமான விசாரணை முறை கடைபிடிக்கப்படுகிறது என்பது பற்றி விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்,’ என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோ மருத்துமனை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை எல்லாம் தற்போது ஆறுமுகசாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது,’ என குற்றம்சாட்டினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆணையம்,  ‘எங்கள் வாதம்  இன்னும் முடிவயவில்லை,’ என தெரிவித்தது. இதையடுத்து, ‘ஆணையம் தனது வாதங்களை  முழுவதையும் முன்வைத்த பிறகு அப்போலோ மருத்துவமனை தனது பதிலை கூறலாம். அதுவரையில் குறுக்கிட வேண்டாம்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதிடுகையில், ‘ஆணையத்தில் நடத்தப்படும் விசாரணை, பதிவு செய்யப்படும் வீடியோக்கள் போன்றவை வெளியாட்களுக்கு கசிய விடப்படுகிறது என்ற அப்போலோ குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை,’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஆணையத்திற்கு என்று எதற்காக தனி வழக்கறிஞர்?. அவர் ஏன் ஆணையத்திடம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்கிறார்?’ என கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஞ்சித் குமார், ‘சாட்சியங்களின் தகவல்கள் முரண்பாடாக இருக்கும் பட்சத்தில், அதை பிரமாணப் பத்திரங்களாக அவர் தாக்கல் செய்கிறார். வேண்டும் என்றால், தாராளமாக ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்துங்கள். மருத்துவர்கள் உள்ளிட்டோரை ஆணையத்தில் புதிதாக சேருங்கள். அதை விடுத்து, அப்போலோவின் முகாந்திரம் இல்லாத குற்றாச்சாட்டை மட்டுமே வைத்துக் கொண்டு ஆணையத்தை விரிவுப்படுத்தக் கூடாது,’ என தெரிவித்தார்.

அதை கேட்ட நீதிபதிகள், ‘ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவக் குழு தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி தமிழக அரசு அதை செய்யலாம். அந்த குழுவானது ஆணையத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யும். மேலும், அது போன்று மருத்துவக் குழு அமைக்கப்பட்டால் அதற்கான செலவையும் அரசே ஏற்கும். மருத்துவ குழு அமைப்பது தொடர்பாக சாட்சியங்களை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற யோசனைகளும் எங்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்மதமா என்பதை அப்போலோ மருத்துவமனைதான் சொல்ல வேண்டும். மருத்துவ குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கை ஏற்புடையதல்ல. தற்போதைய சூழலில் ஆணையத்தில் வேறு நீதிபதிகளை நியமித்தால், அது தற்போது இருக்கும் ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிப்பது மட்டுமின்றி, பல்வேறு குளறுபடிகளையும் ஏற்படுத்தும். அப்போலோ மருத்துவமனை விரும்பினால், ஆணையத்துக்கு உதவுவதற்காக மருத்துவக் குழுவை அமைப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளது,’ என தெரிவித்தனர்.

இதையடுத்து வாதிட்ட ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர், ‘ஜெயலலிதா மரணத்துக்கான காரணங்களை தமிழக மக்கள் அறிய வேண்டும் என்ற மனநிலையில் இருக்கின்றனர். எனவே, அதை மனதில் வைத்துதான் ஊடக செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆணைய விசாரணை தொடர்பான செய்திகள் முறையாக தான் வெளியாகி வருகிறது. ஆணையம் அனைத்து விசாரணை தகவல்களையும் ஊடகத்துக்கு கசிய விட்டது என கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது,’ என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Arriukasami Commission ,Apollo ,Supreme Court , No other judges can be appointed in the Arumugasami Commission: Rejection of the Apollo claim in the Supreme Court
× RELATED வலது தொண்டை குருதிக்குழாயில்...