புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கறிஞர் சங்க விழாவில் முன்னாள் எம்எல்ஏ திடீர் மரணம்: பேசிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார்

புதுச்சேரி: புதுச்சேரிவழக்கறிஞர்கள் சங்கத்தேர்தல் கடந்த 2ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் மூத்த வழக்கறிஞரும், உருளையன்பேட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான பரசுராமன் (75) வாழ்த்திப் பேசினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை வழக்கறிஞர்கள் காரில் ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பரசுராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழந்தது வழக்கறிஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரசுராமன், புதுவை காமராஜ்நகர் தமிழ்ச்ெசல்வி வீதியில் வசித்து வந்தார். இவருக்கு அழகரசி என்ற மனைவியும், காந்திமதி என்ற மகளும், கம்பன் என்ற மகனும் உள்ளனர். பரசுராமன், உருளையன்பேட்டை தொகுதியில் 1991 முதல் 1996 வரை அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். தற்போது, புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக அவைத்தலைவராக இருந்து வந்தார். பரசுராமன் மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More