நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார், மாங்காடு, ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளும், காஞ்சிபுரம் மாநகராட்சியும் உள்ளன. இதில் ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகள், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மட்டுமே இம்முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, காஞ்சியின் 3 பேரூராட்சிக்கு தலா ஒருவர் என, 3 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என 9 பேரை, கலெக்டர் ஆர்த்தி நியமித்துள்ளார். இந்த தேர்தலில்  1000 வாக்காளருக்கு ஓரு ஓட்டுச்சாவடி என முடிவெடுத்து, முந்தைய நகர்ப்புற தேர்தல் வாக்குச்சாவடிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குன்றத்துார், மாங்காடு பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால், வார்டு மறுசீரமைப்பு ஆகிய பணிகள் செய்த பின், தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக பதவி இடங்கள் உள்ள காரணத்தால், இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைவான பதவி இடங்களே உள்ளதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உள்ளனர். இதற்காக காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதனை, கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories:

More