அதிகளவு உபரிநீரை வெளியேற்றாமல் திறம்பட கையாண்டு அசத்தல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1684 மி.கனஅடி நீர் வெளியேற்றம்: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: செம்பரம்பாக்கம்  ஏரியில் இருந்து 1684 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்று  நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், கடந்த 6ம் தேதி இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பின.

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 7ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 7ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் 649 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, அன்று மாலை 3  மணியளவில் 1149 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தது. இதனால், அன்று மாலை 6 மணியளவில் 2149 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, 8, 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் நீர்வரத்து இருந்ததால் 2151 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து, 13ம் தேதிக்கு பிறகு தண்ணீர் திறப்பு 1146 கன அடியாக குறைக்கப்பட்டது. ஆனாலும், ஏரிக்கு 2939 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மொத்தம் 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் 21.32 அடியாக குறைந்ததால் 400 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், 16ம் தேதிக்கு பிறகு பெய்த மழை காரணமாக  3151 கன அடி வீதம் நீர் வரத்து இருந்ததால் அந்த தண்ணீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைந்த போதும், அந்தந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இறுதி வரை ஏரியின் பாதுகாப்பு கருதி 21 அடி வரை மட்டுமே நீர் இருப்பை வைத்துக் கொள்ளும் அளவுக்கு தண்ணீர் திறப்பு இருந்தது. இதனால், ஏரியும் பாதுகாப்பாக இருந்த நிலையில், அதிகளவிலான வெள்ள நீர்  வெளியேற்றுவதும் தவிர்க்கப்பட்டன.

தற்போது, 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.34 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து ஏரிக்கு 750 கன அடி நீர் வரும் நிலையில், 2149 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வரை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1684 மில்லியன் கன அடி மட்டுமே உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது. அதாவது 1.6 டிஎம்சி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதியும் அதிகளவில் உபரிநீரை வெளியேற்றாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் திறம்பட கையாண்டு இருப்பது, அனைவரது மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Related Stories: