×

நுங்கம்பாக்கத்தில் புற்றுக்கோயில் இருந்த அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுநல வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் புற்றுக்கோயில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.நகரை சேர்ந்த சசிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பிரதான சாலையில் எங்கள் குலதெய்வமான புற்றுக்கோயில் உள்ளது. அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலை பகுதியில் உள்ள அந்த கோயிலை பல ஆண்டுகளாக வணங்கி வருகிறோம். சமீபத்தில் அந்த கோயில் இருக்கும் இடத்திற்கு சென்றபோது அந்த கோயிலை காணவில்லை.

கோயில் இடிக்கப்பட்டு சட்டவிரோதமாக பாஸ்யம் உள்ளிட்ட சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 14 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சட்ட விரோதமாக கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1995-96 சென்னை டவுன் சர்வே பதிவில் அரசு புறம்போக்கு நிலம் என்றுதான் உள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்திற்கு கடந்த 2020 ஜனவரியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களை மாற்றம் செய்து அந்த இடத்திற்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அரசு ஆவணங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட கலெக்டருக்கு  கடந்த 2020 நவம்பர் 17ல் புகார் கொடுத்தேன். அதில், அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோயிருந்தேன். எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுத்து சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை மீட்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் அலெக்சிஸ் சுதாகர் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்தின் வரைபடம் மற்றும் மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவுக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Nungambakkam , Welfare case seeking removal of government alienated land encroachment in Nungambakkam: Corporation replies iCourt order
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...