நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு மதுவிருந்து முடிந்து திரும்பும்போது ஓடும் காரில் பெண் இன்ஜினியருக்கு பாலியல் தொல்லை: நண்பர்களை செருப்பால் அடித்ததால் பரபரப்பு; டாக்டர் மகனை கைது செய்து போலீஸ் விசாரணை

சென்னை: நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் மதுவிருந்து முடித்துவிட்டு காரில் சென்ற பெண் இன்ஜினியரை சக ஆண் நண்பர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவர்களை நடுரோட்டில் செருப்பால் அடித்த சம்பவம் நுங்கம்பாக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டாக்டர் மகன் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே நேற்று அதிகாலை 3 மணி அளவில்  கொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரில் 3 ஆண்கள், ஒரு இளம்பெண் இருந்தனர்.

கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, காரில் இருந்த இளம்பெண், தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். அப்போது, இலங்கை துணை தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பெண் வந்த காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். காருக்குள் போதையில் இருந்த இளம்பெண் சக ஆண் நண்பர்களை இப்படி செய்வீயா... என்று கூறியபடி தனது செருப்பால் அடித்து கொண்டிருந்தார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர்களிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால், இளம்பெண் உட்பட காரில் இருந்த 4 பேரும் சொல்வதை கேட்க முடியாத நிலையில் சாலையில் போதையில் தள்ளாடியபடி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதை பார்த்த 2 வாலிபர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். பிறகு விரைந்து வந்த போலீசார் இளம்பெண் மற்றும் உடன் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் (28), சக்தி (28) மற்றும் துரைப்பாக்கத்தை சேர்ந்த கவுதமன் (25) என தெரியவந்தது. கவுதமனின் தந்தை வெளிநாட்டில் டாக்டராக வேலை செய்து வருகிறார்.

இன்ஜினியர்களான 3 பேரும் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. தங்களுடன் பணியாற்றும் கோயம்பேடு பகுதியை சேர்ந்த 29 வயதான இளம்பெண் இன்ஜினியரை நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் மது விருந்துக்கு தங்களது காரில் அழைத்து வந்துள்ளனர். பிறகு 4 பேரும் அதிகளவில் மது குடித்துவிட்டு நடக்க முடியாத அளவில் காரில் சென்றுள்ளனர்.

அப்போது காரில் வந்த பெண் இன்ஜினியருக்கு பாலியல் ரீதியாக ஆண் நண்பர்கள் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

போதையில் இருந்த பெண் இன்ஜினியர், ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு ஆண் நண்பர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் உதவி கேட்டு சத்தம் போட்டது தெரியவந்தது. அப்போது சக ஆண் நண்பர்கள், தவறுக்கு தங்களது தோழியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் அவர் மன்னிக்க முடியாது என்று கூறி செருப்பால் அடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.காரில் வந்த இளம்பெண் மற்றும் உடன் இருந்த நபர் அதிகளவில் போதையில் இருந்ததால் போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இளம் பெண்ணின் ஆடைகள் களைந்தும், சற்று கிழிந்தும் இருந்ததால் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் போலீசார் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் தனியாக விசாரணை நடத்தினர். அதில், ஐடி நிறுவனத்தில் அவர் வேலை செய்து வந்தாலும், நடன கலைஞர் என்பதால், பணி முடிந்த பிறகு பகுதி நேரமாக நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் நண்பர்கள் அழைப்பின்படி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தொகுப்பு ஊதியத்தில் நடனமாடி வருவது தெரியவந்தது.

அதன்படி கவுதமன் அழைப்பின்பேரில் நட்சத்திர ஓட்டலுக்கு அவரது நண்பர்களுடன் சென்று மது அருந்திவிட்டு நடனமாடியதாகவும், பிறகு ஒப்பந்தப்படி வீட்டில் இளம்பெண்ணை விடுவதற்காக காரில் செல்லும் போது, கவுதமன் போதையில் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. பிறகு பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின்படி, ஆண் நண்பர் கவுதமன் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் காருடன் தப்பி சென்ற அவரது நண்பர்களான தீபக் மற்றும் சக்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின்படி, ஆண் நண்பர் கவுதமன் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: