×

தனியார் கடைகளில் ரூ.150க்கு விற்பனை பண்ணை பசுமை கடைகளில் கிலோ தக்காளி ரூ.79க்கு விற்பனை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: தனியார் கடைகளில் கிலோ தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யும் நிலையில், தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.79க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை, மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தக்காளி வரத்து பெரிய அளவில் குறைந்தது.

இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னை நகர மக்களுக்கு குறைந்த விலையில் தற்காளி விற்பனை செய்ய கூட்டுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி அனைத்து டியுசிஎஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர்களும் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, டியுசிஎஸ் அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து செட்டிப்பள்ளியில் உள்ள வேளாண்மை அலுவலகங்கள் மூலம் நேற்று முதல் தக்காளியை கொள்முதல் செய்ய தொடங்கினர்.

நேற்று மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ தக்காளி டியுசிஎஸ் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தக்காளி, சென்னை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை அங்காடிகள், நடமாடும் காய்கறி மையங்கள், டியுசிஎஸ், காமதேனு, நாம்கோ, சிந்தாமணி ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் கிலோ ரூ.79க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமை கடைகளில் தனியார் கடைகளைவிட 70 ரூபாய்க்கு குறைவாக தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தக்காளி விலை சீரடையும் வரை, தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு தொடர்ந்து குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tomatoes sold for Rs. 150 in private shops Farm green shops sell for Rs. 79 per kg: Tomato
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...