×

சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்கள், ஆண்களுக்கு சமமாக வார்டுகளை ஒதுக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

சென்னை: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான இடங்கள் ஒதுக்க கோரிய வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கு தலா 16 இடங்கள் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 168 இடங்களில் கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் கடந்த 2019ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசிதழில் 89 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்களுக்கு 79 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இரு பாலினத்தவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில் அரசிதழில் பெண்களுக்கு கூடுதலாக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பாரபட்சத்தை சரிசெய்ய கோரி கடந்த 13ம் தேதி தமிழக அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையருக்கும் மனு அளித்தேன். ஆனால், மனு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மாநகராட்சி தேர்தலில் இரு பாலருக்கும் சமமான வார்டுகளை ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், விரைவில் மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாரர் சார்பில் வக்கீல் கவுதம் என்பவர்  பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Tags : Chennai Municipal Election ,Court , Case of allocating wards equally for men and women in the Chennai Municipal Election: The case will be heard in the I-Court on Monday
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...