×

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் சென்னையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கத்தை அடிக்கப் பாய்ந்த சி.வி.சண்முகம்

* எடப்பாடி மீது ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு
* 3 மணி நேரம் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தலைமைக் கழகத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சி.வி.சண்முகம் அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதே கூட்டத்தில் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். பெரும்பாலான தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சொன்னதால் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 98 சதவீதம் இடங்களில் வெற்றிபெற்றது.

அதிமுக, பாமக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1.45 மணி மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், கட்சி தலைமை எதிர்பார்த்ததற்கு எதிராக, நிர்வாகிகள் இடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. அடுத்து, சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக, தலைமையை பகிரங்கமாக குற்றம்சாட்டிவிட்டு கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது, கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காகத்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறும் என்று கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைமையே எதிர்பார்க்காத அளவுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசினார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையாக இருந்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

உடனே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென எழும்பி, உள்ளாட்சி தேர்தலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ‘இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அரசியல் தெரியும்? இந்த முறை அதிமுக வெற்றி பெற்றிருந்தால், நான்தான் எம்ஜி ஆர் என்று சொல்லியிருப்பார்’ என்று வெளியில் ஒருமையில் பேசுகிறீர்கள் என்று அன்வரை ஒருமையில் பேச தொடங்கினார். பதிலுக்கு அன்வர் ராஜாவும் பேசினார். அன்வர் ராஜாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அன்வர் ராஜா கூட்டத்தில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.  இதையடுத்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்தார். எப்போதும், இதுபோன்ற செயல்களால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

எந்த கருத்தையும் அமைதியாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சிலர் சசிகலா குறித்து பேச தொடங்கினர். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி அவரை பற்றி யாரும் பேசக்கூடாது என்று அந்த கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது ஓபிஎஸ் பேசும்போது, கட்சியில் யாரும் என்னை மதிப்பதில்லை. போஸ்டரில் என் படத்தை ஸ்டாம்ப் சைசுக்கு போடுகின்றனர். சிலரது பேச்சு, செயல்பாடு என் மனம் புண்படும்படி உள்ளது. யாருக்கும் கட்சி நடைமுறை தெரியவில்லை.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தேன். முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையில் எம்ஜிஆர் இதற்காக ஒரு கமிட்டி அமைத்தார். அதில் 11 பேர் ஒரு நிலை எடுத்தனர். நீதிபதி ஒரு கருத்தை எம்ஜிஆரிடம் அறிக்கையாக கொடுத்தார். இதனால் 11 பேரும் எம்ஜிஆரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் ஜெகதீசன் கமிட்டி அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.  எனக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. இதற்காக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அவை முன்னவராக இருந்ததால் சட்டப்பேரவையில் நான் தீர்மானத்தை முன் மொழிந்தேன்.

கட்சியின்  நடைமுறையை சரியாக கடைப்பிடித்து வந்தேன். எடப்பாடி முதல்வராக இருந்தபோது,  நான் துணை முதல்வராக இருந்தேன். அதனால், அவரது பேச்சை மீறி நான்  நடக்கவில்லை. இப்போது நான் கட்சியின் தலைவர். ஆனால் என்னை யாரும் மதிப்பதில்லை, அசிங்கப்படுத்துகின்றனர். அவர்களை சிலர் ஊக்கப்படுத்துகின்றனர். சசிகலா விவகாரத்தில் நான் என் கருத்தை தெரிவித்தேன். ஆனால் ஜெயக்குமார், ஆதிராஜாராம் ஆகியோர் முந்திரிக்கொட்டை போல எனக்கு எதிராக பேசுகின்றனர். தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று சொன்னேன்.

அதில் என்ன தவறு இருக்கிறது. இதுபோல கூடி பேசி முடிவு எடுப்பது வழக்கம்தானே. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான். நான் இருப்பது பிடிக்கவில்லை என்றால் என்னை விட திறமையானவர், நல்ல ஆளை நியமியுங்கள். நான் ஒதுங்கிக் கொள்கிறேன். அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். ஒருவருக்கு ஒரு பதவி என்பதை வலியுறுத்துகிறேன். ஆனால் கேட்பதில்லை என்றார். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எழுந்து,  வன்னியர்கள் அதிமுகவுக்கு ஓட்டுப்போடவில்லையா, யாரும் வன்னியர்கள் ஜெயிக்கலையா என்ன பேசுகிறீர்கள் என்று பேச ஆரம்பித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து, என்னையா எப்போ பார்த்தாலும் எழுந்து யாரையாவது பேசிக்கிட்டு. போன கூட்டத்தில் வளர்மதி, தளவாய் ஆகியோரை ஒருமையில் பேசினாய். நீ மட்டும்தான் ஆளா. உட்காருய்யா என்றார்.

இதனால் பதிலுக்கு சி.வி.சண்முகமும், ஒருமையில் வைத்திலிங்கத்தை பேச, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது வைத்திலிங்கம் இருந்த பகுதி நோக்கி சி.வி.சண்முகம் ஓடினார். முன் பகுதியில் நின்ற வைத்திலிங்கமும் வாய்யா, ஒரு கை பார்க்கலாம் என்று எழுந்து வந்தார். இதனால் இருவரும் கைகலப்பில் ஈடுபடும் நிலை உருவானது. வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக திருத்தணி அரி உள்ளிட்டவர்கள் எழுந்து வந்து வைத்திலிங்கத்தை சுற்றி நின்றனர். அதற்குள் பலரும் சி.வி.சண்முகத்தை பிடித்து உட்கார வைத்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன், ‘‘அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு நீண்ட  போராட்டத்துக்கு பிறகு அமைக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எந்த அதிகாரமும்  வழங்கப்படாமல் உள்ளது. வழிகாட்டு குழுவினர் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தி  கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, அதிமுகவில்  50க்கும் மேற்பட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களும்  எந்த பணியும் இல்லாமல் உள்ளனர். அதனால், அவர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை  பிரித்து வழங்கி, அதிமுக கட்சியை பலப்படுத்த வேண்டும். அனைத்து  அதிகாரத்தையும் ஒரு சிலரே வைத்துக்கொள்ளும் நிலையை மாற்ற வேண்டும். குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அனைத்து சாதியினருக்கும் பொறுப்புகளை வழங்க வேண்டும்”  என்றார். அப்போதும் சி.வி.சண்முகம், உட்காருங்க. ஏதாவது குழு, கிழுன்னு பேசிக்கிட்டு என்றார்.

 ஏ.கே.செல்வராஜ் பேசும்போது, கட்சியில் சாதி பார்க்கக் கூடாது. அனைத்து சாதிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு சாதிதான் ஓட்டுப்போட்டார்களா என்று சி.வி.சண்முகத்தைப் பார்த்துக் கேட்டார்.  உடனே மனோஜ்பாண்டியன் எழுந்து, சாதிவாரியாக கட்சியில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எங்கள் பகுதியில் அதிகமாக உள்ள தேவேந்திர குலவேளாளர்களுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் கூட வழங்கவில்லை. கன்னியாகுமரி முதல், மதுரை வரையும், டெல்டா முதல் கோவை மாவட்டகள் வரையும் அவர்கள் பரவியுள்ளனர். தென் மாவட்டங்களில் வெற்றிக்கு அவர்களது பங்கு உள்ளது. ஆனால் பட்டியல் இனத்தில் உள்ள மற்றொரு சமுதாயத்துக்கு கூட 2 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதிகாரத்தை அனைத்து சாதிக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றார்.  

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘‘அதிமுக கட்சி  பதவிகளை இளைஞர்களுக்கு வழங்கி அவர்களுக்கு வழிவிட வேண்டும்’’ என்றார். தளவாய்சுந்தரமோ, இரு தலைவர்களும், இரண்டு கண் போன்றவர்கள். இருவருக்குள்ளும் ஒற்றுமை இல்லை. இப்படியே இருந்தால் நான் வேறு கட்சிக்கு போக மாட்டேன். ஒதுங்கிக் கொள்கிறேன் என்றார்.   இப்படி 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எப்படி வெற்றிபெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்கு பதில், உள்கட்சி பிரச்னைகளே பெரிய அளவில் பேசப்பட்டதால் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர் என்றனர்.

* ஒற்றை தலைமை கோஷம்
அதிமுக கட்சி தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வரும்போது, ‘அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும்’ என்று இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

* திடீர் போராட்டம்
ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10.45 மணிக்கு தொடங்கியது. அப்போது, காலை 11 மணி அளவில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட இலத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுரேசை மாற்ற வேண்டும். அவர் பொறுப்பில் இருக்கும் வரை கட்சியை வளர்க்க முடியாது. மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமாரவேல் செய்யூர் தொகுதிக்குள் தலையிடுவதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இலத்தூர் ஒன்றிய அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பதாகையுடன் திடீரென அதிமுக கட்சி தலைமை அலவலகம் முன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

* அன்வர்ராஜா மன்னிப்பு கேட்டார்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கட்சி கூட்டத்தில் ஜனநாயக ரீதியாக பல்வேறு கருத்துக்களை பரிமாறினோம். சிலர் கருத்து சொல்ல முயன்ற போது, உள்ளே இருந்த சிலர் அவர்களை பேசக்கூடாது என்று சொன்னார்கள். இறுதியாக எல்லாரும் கட்சியை வலுவோடு நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். சசிகலாவுக்கு ஆதரவாக அன்வர் ராஜா பேசியதாக கேட்கிறீர்கள். நீங்கள் சொன்ன கருத்தை அவர் சொல்லவில்லை. சத்தியமாக அந்த பேச்சே எழவில்லை. அன்வர் ராஜா ஒருமையில் பேசியதை வைத்து தான் எல்லாரும் கண்டித்து பேசினர். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே அவர் ஒருமையில் பேசியது தவறு என்று தான் சொன்னார்கள். அன்வர் ராஜா பேசியது தவறு என்று எல்லாரும் எழுந்து நின்று சொன்னார்கள். அவரை பேசக்கூடாது என்று சொன்னதை தவிர வேறு ஒன்றும் இல்லை. அன்வர் ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்டார்’’ என்றார்.

* முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி குற்றச்சாட்டு
நான் மாநில பொறுப்பில் உள்ளேன். எனக்கு சீட் வழங்கவில்லை. ஏற்றுக் கொண்டேன். ஆனால் வேட்பு மனு தாக்கலின்போது கூட என்னை கூப்பிடாமல் புறக்கணித்து விட்டனர். மாநில நிர்வாகிகளை தேர்தலில் பயன்படுத்தவில்லை. எங்களை வேலைக்காக கூப்பிடவும் இல்லை. எங்களைப் போல தலைமைக்கழக நிர்வாகிகள் பலரும் வேலை செய்யவில்லை. அப்படி என்றால் நிர்வாகிகள் எதற்கு. வேட்பாளராக மாவட்டச் செயலாளராக சொன்னவர்களுக்குத்தான் சீட் வழங்கப்பட்டது. செலவையும் அவர்களே பார்த்துக்கொண்டனர். யாரையும் அரவணைத்து செல்லவில்லை. இதற்கு மாவட்டச் செயலாளர்கள்தான் காரணம் என்றார்.

Tags : CV ,Shanmugam ,Vaithilingam ,AIADMK ,Chennai ,OBS ,EPS , CV Shanmugam beats Vaithilingam at AIADMK district secretaries' meeting in Chennai led by OBS and EPS
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...