×

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4,626 கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4,626 கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே ரூ 2, 629.29 கோடி கோரிய நிலையில் தற்போதைய சேதத்தையும் மதிப்பிட்டு கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளது. தற்காலிக சீரமைப்புக்கு ரூ1,070.92 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்கு ரூ3,554 கோடியும் தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 மாதங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கன மழையினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதற்கட்ட மதிப்பீடாக ரூ.549.63 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.2079.86 கோடியும், ஆக மொத்தம் ரூ.2829.29 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கணக்கெடுக்கப்பட்டுள்ள கூடுதலான சேத விவரங்களின்படி தற்காத சீரமைப்பு பணிகளுக்கு ரூ.521.28 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.1475.22 கோடியும் ஆக மொத்தம் ரூ.1996.50 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட அறிக்கையில் கோரப்பட்டுள்ள தொகை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1070.92 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.3554.88 கோடியும் ஆக மொத்தம் ரூ.4625.80 கோடி கூடுதலாக வழங்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Government ,Union Government ,Tamil Nadu , Tamil Nadu, flood affected, Union Government, request
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...