×

கர்நாடகாவில் லஞ்சத்தில் திளைத்த அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை!: கிலோ கணக்கில் தங்கம், மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது..!!

கர்நாடகா: கர்நாடகா அரசு துறைகளில் லஞ்சத்தில் திளைத்த 15 அதிகாரிகளை குறிவைத்து அம்மாநில ஊழல் தடுப்புப்படையினர் 68 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கிலோ கணக்கில் தங்கம், மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்தில் அரசு உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் லஞ்சத்தில் திளைப்பதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்திருப்பதாகவும் அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச அதிகாரிகளை ரகசியமாக கண்காணித்து வந்த ஊழல் தடுப்பு படையினர், 15 அதிகாரிகளை குறிவைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனைவரும் அம்மாநில வருவாய்த்துறை, விவசாயத்துறை, பால்வளத்துறை, மருத்துவத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் பணிசெய்யக்கூடியவர்கள். பெங்களூரு மாநகராட்சி உயர் அதிகாரிகளும் சோதனைக்கு தப்பவில்லை. மாநிலத்தில் 68 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 8 கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400 அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனையின் போது லஞ்சப்பணத்தில் வாங்கி குவிக்கப்பட்ட நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கதக் மாவட்டத்தில் விவசாயத்துறை இணை ஆணையர் ருத்ரேஷ் அப்பார் வீட்டில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ தங்கம், 15 லட்சம் ரூபாய் ரொக்க பணம், மற்றும் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக ஊழல் தடுப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொட்புலாப்பூர் வருவாய்த்துறை ஆய்வாளர் லட்சுமி நரசிம்மா வீட்டில் இருந்து சுமார் 5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

15 அதிகாரிகளின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் மற்றும் பொருட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின் மதிப்பையும் ஆய்வு செய்து வருவதாகவும் ஊழல் தடுப்பு படையினர் தெரிவித்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் கர்நாடகா அரசு அதிகாரிகள் 15 பேர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனை அம்மாநில அரசு ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Karnataka , Karnataka, Government Officials, Test
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!