நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் மதுவிருந்து ஓடும் காரில் பெண் இன்ஜினியரிடம் போதையில் அத்துமீறல்: ஆண் நண்பர்களை செருப்பால் அடித்ததால் பரபரப்பு

சென்னை: நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் மதுவிருந்து முடித்துவிட்டு காரில் சென்ற பெண் இன்ஜினியரிடம் சக ஆண் நண்பர்கள் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் சக ஆண் நண்பர்களை நடுரோட்டில் செருப்பால் அடித்ததால் நுங்கம்பாக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே இன்று அதிகாலை 3 மணி அளவில் கார் ஒன்று வேகமாக வந்தது.

அந்த காரில் 3 ஆண்கள், ஒரு இளம் பெண் இருந்தனர். கார் சாலையில் ெசன்று கொண்டிருந்த போது, காரில் இருந்த இளம் பெண் ஒருவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். கார் நிறுத்தப்பட்டது. அப்போது போதையில் இருந்த இளம் பெண் சக ஆண் நண்பர்களை இப்படி செய்வீயா... என்று கூறியபடி தனது செருப்பால் அடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து, சாலையில் போதையில் தள்ளாடியபடி சண்டை போட்டுக்கொண்டிருந்த இளம்பெண் உட்பட 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக்(27), சக்தி(28), கவுதம்(28) என்றும், இன்ஜினியர்களான இவர்கள் சென்னை துரைப்பாக்கத்தில் தங்கி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 3 பேரும் உடன் பணியாற்றும் இளம் பெண் இன்ஜினியரை நேற்று இரவு தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் மது விருந்துக்கு தங்களது காரில் அழைத்து வந்துள்ளனர். பிறகு 4 பேரும் அதிகளவில் மது குடித்துவிட்டு நடக்க முடியாத அளவில் தங்களது காரில் சென்றுள்ளனர். அப்போது காரில் உடன் வந்த பெண் இன்ஜினியரை பாலியல் ரீதியாக ஆண் நண்பர்கள் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

போதையில் இருந்த பெண் இன்ஜினியர் ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு தனது ஆண் நண்பர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும் வகையில் உதவி கேட்டு சத்தம் போட்டது தெரியவந்தது. அப்போது சக ஆண் நண்பர்கள் தவறுக்கு தங்களது தோழியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் அவர் மன்னிக்க முடியாது என்று கூறி செருப்பால் அடித்ததும் தெரியவந்தது. காரில் வந்த இளம் பெண் உட்பட 4 பேரும் அதிகளவில் போதையில் இருந்ததால் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இளம் பெண்ணின் ஆடைகள் கலைந்தும், சற்று கிழிந்தும் இருந்ததால் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் போலீசார் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதைதொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் இளம் பெண்ணை 3 பேரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளம் பெண் மற்றும் 4 பேரின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ேமலும், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு போதை தெளிந்தால் தான் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: