2024ல் நடக்கும் பார்லி. தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க வேண்டும்!: பாஜக தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: வரும் 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் முகமாக மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த 22ம் தேதி டெல்லி வந்தார். அவர் நாளை (நவ. 25) வரை தலைநகரில் இருப்பார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்) மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேசுகிறார்.

அதேநேரம் வரும் 29ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். குறிப்பாக வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும் முன்கூட்டியே வகுத்து வருகிறார். இதுகுறித்து  மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், ‘முதல்வர் என்ற முறையில் பிரதமர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க ஒவ்வொரு மாநில முதல்வரும்  டெல்லி வருவார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் முகமாக மம்தா பானர்ஜி இருக்கிறாரா? இல்லையா?  என்பதை அக்கட்சிதான் அறிவிக்க வேண்டும். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை திரிணாமுல் காங்கிரஸ்  அதிகாரப்பூர்வ அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகளின் முகமாக மற்றக் கட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய முடியும்.

மம்தா பானர்ஜியை பொருத்தமட்டில் அவர் தங்களது கட்சியின் பிரதிநிதிகளை பல மாநிலங்களுக்கும் அனுப்புவற்கு காரணம், அவர் தேசிய அரசியலில் களம் இறங்க விரும்புகிறார். அதனால்தான் சமீபத்தில் கோவா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு சென்றுவந்தார்’ என்றார்.

Related Stories: