×

கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை : மதுரை விமான நிலையம் அருகே கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே பெருங்குடியில் உள்ள பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாக வரலாற்றுத்துறை மாணவர் சூரியபிரகாஷ் அளித்த தகவலின்பேரில், மதுரையை தொல்லியல் கள ஆய்வாளரான பேராசிரியர் முனீஸ்வரன், பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, மற்றும் ஆர்வலர் ஆதி பெருமாள் சாமி குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது ஆலமரத்து விநாயகர் கோயில் அருகே குத்துக்கல் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டினைப் படி எடுத்து ஆய்வு செய்தபோது கிபி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர்கள் முனீஸ்வரன்,  லட்சுமண மூர்த்தி கூறியதாவது: பெருங்குடியில்  பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது. அவை மண்ணில் பாதி புதைந்த நிலையில் 5 அடி நீளம் கொண்ட கல் தூணில் எட்டுக்கோணம், இரண்டு பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. தூணின் மேல் பகுதி பட்டையில் மூன்று பக்கம் நில அளவை குறியீடுகள் மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரத்தின் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது.

கோட்டோவியம் நிலத்தை வைணவக் கோயிலுக்கு நிலக்கொடையாகக் கொடுத்ததைச் சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டானது, மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம்பெறும். இப்பகுதியில் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டில், கல்தூணின் கீழ்பட்டை பகுதியில் 12 வரிகள் இடம் பெற்றிருந்தன. இக்கல்வெட்டை மைப்படி எடுத்து ஆய்வு செய்தபோது,  எழுத்தமைதியின் வடிவத்தை வைத்து கி.பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டது.

நிலதானம் வழங்கிய செய்தியும், ஆவணமாக எழுதி கொடுத்தவரின் பெயர், அதன் நிலத்தின் நான்கு எல்லைப் பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும் அவரின் ஆட்சியில்  நிலதானம் வழங்கியவரையும்,  ஆவணமாக எழுதிக் கொடுத்த குமராஜன் என்பவரின் பெயரும் கல்வெட்டு இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.


Tags : Madurai: A 13th century AD land grant inscription has been found near Madurai Airport. Near Madurai
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...