சுற்றுலா பயணிகள் வருகையின்றி ஏலகிரி மலை படகுத்துறை வெறிச்சோடியது

ஜோலார்பேட்டை : தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி ஏலகிரி மலை படகுத்துறை வெறிச்சோடி காணப்படுகிறது.ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலையில் எப்போதும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலவுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்தும், வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் இடிந்தும் விழுந்தன. மேலும், ஏலகிரி மலை செல்லும் சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்ல போலீசார் தடைவிதித்தனர்.

இதனாலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையின்றி, கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி இருக்கிறது. மேலும், அங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து சேறும், சகதியுமாக இருந்து வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பூங்காக்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். சுற்றுலா பயணிகள் தடையின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: