×

லாலாப்பேட்டை சுகாதார நிலையத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள் அவதி-சீரமைக்க கோரிக்கை

ராணிப்பேட்டை : லாலாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கன மழையால் தேங்கி கிடக்கும் மழை நீரால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மழைநீரை சீரமைக்க கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒரு தலைமை மருத்துவர், 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தின்கீழ் உள்ள அம்மூர், முசிறி, நவ்லாக், சுமைதாங்கி என 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

அவ்வாறு செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 90 பேருக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  மேலும், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இதற்கு முன்பு 10 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு அந்த கட்டிடத்தில் பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள், ஆய்வகம், உள் நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைக்காலங்களில் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் புகுந்து இரண்டு மூன்று நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால், சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கொசு உற்பத்தியாகும் நிலையமாக மாறியுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மழைநீர் புகுவதை தடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Lalapetta ,Health Station , Ranipettai: At the Lalapettai Government Primary Health Center, patients are suffering from stagnant rain water.
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி