வரதராஜன் பகுதியில் போதிய பஸ் வசதி இல்லாததால் இரவு 7 மணிவரை பேருந்திற்காக மாணவிகள் காத்திருக்கும் அவலம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிமடம் : வரதராஜன்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் உரிய பஸ் வசதி இல்லாததால் இரவு 7 மணி வரையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்து உள்ள வரதராஜன் பேட்டையில் ஒரு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், மகளிர் கல்லூரியும் உள்ளது. தென்னூரில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகள் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதியில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி, ராஜேந்திர பட்டினம், பாளையங்கோட்டை, கொண்டசமுத்திரம், பக்கிரி மானியம், வாலீஸ்பேட்டை, ராமாபுரம், முஷ்ணம் ஆகிய ஊர்களிலிருந்து வந்து கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த மூன்று பள்ளிகளிலும் பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காலை வரும் போதும், மாலை பள்ளி முடிந்து செல்லும் போதும் தினமும் ஒரு பேருந்திற்கு 100 பேர் வீதம் 2 அல்லது 3 பஸ்களில் தினமும் மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மாலை பள்ளி விடும் நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும் 2 அரசு பேருந்தும் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு அரசு பேருந்துகளிலும் ஒரு பேருந்திற்கு 100 மாணவர்களுக்கும் மேல் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

அடுத்த பஸ் இரவு 7 மணிக்கு மேல் தான் உள்ளது என்பதால் இந்த இரண்டு பேருந்துகளிலும் செல்வற்கு மாணவர்கள் அவசரப்பட்டு நெருக்கிய படி பயணித்து செல்கின்றனர்.. இதனால் பள்ளி நிர்வாகமும் பேருந்தின் நேரத்திற்கு தகுந்தார் போல் மாணவர்களை முன்னதாகவே பஸ்சில் அனுப்பி வைத்து விடுகின்றனர். இருந்தபோதிலும் மீதமுள்ள மாணவ-மாணவிகள் இரவு 7 மணி வரையிலும் காத்திருந்து பஸ்ஸில் பயணம் செய்து அவர்கள் வீட்டிற்கு சென்று சேர்வதற்கு இரவு 9 மணி ஆகிவிடுகிறது.. இந்தப் பகுதி பயிலும் மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் வீட்டிற்கு செல்ல கூடுதலாக பேருந்து வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பெற்றோர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More