×

இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட சட்டவிரோத கடன் செயலிகள் உள்ளன... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

மும்பை : இன்ஸ்டன்ட் லோன், குயிக் லோன் என விதவிதமான வார்த்தைகளால் சட்ட விரோத கடன் நிறுவனங்கள் இணையதளம் மூலம் வலையை விரிப்பது பன்மடங்கு பெருகியுள்ளது. இந்தியாவில் 600க்கும் அதிகமான சட்டவிரோத கடன் செயலிகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017ம் ஆண்டில் 11,671 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் கடன் விநியோக சந்தையின் மதிப்பு 2020ல் ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சுமார் 1,100 கடன் செயலி நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் கடன் சேவையில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் இவற்றில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சட்டவிரோதமாக செயல்படுவது ரிசர்வ் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய நிறுவனங்கள் கடனை வசூலிப்பதில் ஆட்சேபகரமாக முறையில் நடந்து கொள்வதும் கடனாளிகள் மொபைல் விவரங்களை திருடுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. டிஜிட்டல் கடன் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பாண்டு 2,562 புகார்கள் குவிந்துள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தே அதிக புகார்கள் வந்துள்ளன. எந்த ஒரு நிறுவனத்திடமும் தனிப்பட்ட விவரங்களை கொடுக்கும் முன்பு ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அலுவலகத்திற்கே நேரடியாக சென்று மட்டுமே கடன் பெற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Tags : India ,Reserve Bank , இன்ஸ்டன்ட் லோன்
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...