முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்: டெல்லி போலீசார் விசாரணை

டெல்லி: காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறி பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும்,  முன்னாள் கிரிக்கெட் அணி வீரருமான கவுதம் கம்பீர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கிழக்கு டெல்லி நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர், கிரிக்கெட், அரசியல் என அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென டெல்லி போலீசாரை தொடர்புகொண்டு, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், அவரது வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்பப்பட்ட இந்த இமெயில் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில் ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் காஷ்மீரில் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு உருவெடுத்து வருகிறதா? என்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கவுதம் கம்பீர் போட்ட 2 ட்வீட்களால் தான் தற்போது கொலை மிரட்டல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு கவுதம் கம்பீருக்கு சர்வதேச எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: