திருப்பதி ராயல செருவு ஏரிக்கரை விரிசல் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்கள்-சந்திரகிரி எம்எல்ஏ வழங்கினார்

திருமலை : திருப்பதி ராயல செருவு ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்களர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி புறநகர் பகுதியில் சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட ராயல செருவு ஏரி உள்ளது. இந்த ஏரியானது 0.6 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் வகையில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண தேவராயர் பேரரசர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது.

கடந்த வாரம் பெய்த கனமழையால் இந்த ஏரியில்  0.9 டிஎம்சி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிந்து கொண்டியிருக்கிறது. இதையடுத்து, அதிகாரிகள் கொண்ட குழுவினர் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராயல செருவு ஏரியை சுற்றியுள்ள ராமச்சந்திராபுரம் மண்டலத்தில் உள்ள சி-காளேப்பள்ளி, சித்தத்தூர், ராயலசெருவு, புள்ளமநாயுடு கண்டிகா, திருப்பதி கிராமிய மண்டலம் விநாயகநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் முழுவதும் தீவாக மாறியுள்ளது. இங்குள்ள மக்களுக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர்.

அப்போது, அவர் எக்காரணத்தை கொண்டும் மனம் தளர வேண்டாம். மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories: