×

அரசின் திட்டங்களுக்கு தடையாக உள்ளீர்கள்!: புதுச்சேரியில் தலைமை செயலாளரை முற்றுகையிட்டு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்குவாதம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக உள்ள தலைமை செயலாளரை முற்றுகையிட்டு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில தலைமை செயலாளராக அஷ்வின் குமார் உள்ளார். புதுச்சேரியில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி மக்களுக்காக பல திட்டங்களை அறிவித்தார். அதேபோல் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இத்திட்டங்கள் சட்டப்பேரவையில் அறிவித்ததோடு மட்டுமே உள்ளது; தற்போது வரை நடைமுறை படுத்தப்படவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு வந்த ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக, சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சுமார் 10 பேர், தலைமை செயலாளர் அஷ்வின் குமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அச்சமயம், முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு நீங்கள் முற்றுக்கட்டையாக இருப்பதற்கு என்ன காரணம்?..அரசின் காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை செயலாளர் அஷ்வின் குமார் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேதங்கள் அதிகளவில் இருக்கின்றன.

நேற்று ஒன்றியக் குழுவும் பார்வையிட்டு சென்றுள்ளது. தற்போது நீங்கள் புதுச்சேரியில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு 14 கோடி தேவை என கூறி அறிக்கை அனுப்பியுள்ளீர்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பாதிப்பு அதிகளவில் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி, மழை வெள்ள பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் முதலமைச்சரின் உத்தரவை மீறி 14 கோடி கேட்பதற்கு என்ன காரணம்?..புதுச்சேரி வளர்ச்சி பெறக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். தொடர்ந்து தங்களது கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கும் வரை தாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் உத்தரவு பெரியதா? அல்லது உங்கள் உத்தரவு பெரியதா? என்பதற்கு விடை தெரியாமல் செல்ல மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


Tags : General Secretary ,Pondicherry , Puducherry, Chief Secretary, NRC, BJP, Independent MLAs
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...