திருவில்லிபுத்தூர் அருகே மான், மிளா வேட்டை 2 பேருக்கு வலை-20 கிலோ இறைச்சி பறிமுதல்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே மான், மிளாவை வேட்டையாடிய 2 வாலிபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.திருவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தரபுரம் பகுதியிலுள்ள தோட்டத்தில் வேட்டையாடப்பட்ட மான், மிளா இறைச்சி வைத்திருப்பதாக மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் வனத்துறை ரேஞ்சர் கதிர்காமன், வனவர் பாரதி தலைமையில் வனத்துறையினர் அத்தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் வேட்டையாடப்பட்ட மான், மிளா இறைச்சி 20 கிலோ, 8 கால்கள் இருந்தது தெரியவந்தது. வனத்துறையினரை கண்டதும் தோப்பில் இருந்த 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து வனத்துறையினர் 20 கிலோ இறைச்சி, தப்பியோடியவர்களின் 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பரிசோதனைக்காக சென்னை வண்டலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தப்பிய இருவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: