×

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு : திரிபுராவில் எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல் குறித்து பேசுகிறார்!!

டெல்லி : பிரதமர் மோடியுடனான இன்றைய சந்திப்பின் போது, எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு, திரிபுராவில் எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். 5 நாட்கள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், பிரதமர் மோடியை இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசுகிறார். அப்போது திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசின் அதிகார மீறல், எதிர்கட்சிகள் தலைவர்கள் மீது வழக்குகள் போட்டு முடக்கும் விவகாரம் மற்றும் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள மாநிலங்களில் எல்லை பாதுகாப்புப் படைக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகார வரம்பு உள்ளிட்டவை குறித்து மம்தா முறையிட உள்ளார்.

இதனிடையே மம்தாவின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார், முதல்வர் என்ற வகையில் பிரதமரை அவர் சந்திப்பது வழக்கமான ஒன்று என்றார். அதே நேரத்தில் மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திரிணாமுல் காங்கிரஸ் தாமதம் செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை திரிபுரா, கோவா என பல்வேறு மாநிலங்களில் பலப்படுத்தும் நடவடிக்கையில் மம்தா பானர்ஜி  இறங்கியுள்ளார். எனவே கட்சியை தேசிய கட்சியாக மாற்ற மம்தா முடிவு எடுத்து பணியாற்றி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.காங்கிரஸ் கட்சியை மமதா மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுப்பப்படுகிறது. தற்போது டெல்லியில் உள்ள மம்தா சோனியாவை சந்தித்து பேசும் திட்டம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


Tags : West Bengal ,Principal ,Mamta Banerjee ,Modi ,Tripura , மம்தா பேனர்ஜி
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி