×

இமாச்சலில் வறண்ட தால் ஏரியில் தத்தளித்த ஆயிரக்கணக்கான மீன்களை காப்பாற்றிய தன்னார்வலர்கள்!: இணையத்தில் குவியும் பாராட்டு..!!

தர்மசாலா: இமாச்சலப்பிரதேசத்தில் வறண்ட ஏரி ஒன்றில் தத்தளித்த ஆயிரக்கணக்கான மீன்களை தன்னார்வலர்கள் பிடித்து பல்வேறு நீர் நிலைகளுக்கு பாதுகாப்பாக மாற்றிய காணொளி இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா நகரத்தில் உள்ள தால் ஏரி மிகவும் பிரபலமான நீர் தேக்கமாகும். சமீப நாட்களாக இந்த ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் போதுமான நீர் இன்றி ஏராளமான மீன்கள் மடிந்து வந்தன. இதையடுத்து மீன்களை காப்பாற்ற லாரிகள் மூலம் ஏரியில் நீர் நிரப்ப தர்மசாலா நகர நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் போதுமான நீர் இன்றி மடியும் மீன்களை காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மீன்களை காப்பாற்ற திபெத்திய தன்னார்வ அமைப்பினர் ஒன்று திரண்டனர். அந்த அமைப்பின் 300 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஏரியில் இறங்கி நீர் போதிய அளவில் இல்லாமல் சுவாசிக்க போராடிய மீன்களை பிடித்து பெரிய பாத்திரங்களில் சேகரித்தனர். பின்னர் தால் ஏரியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் அருகில் உள்ள குளங்கள், பண்ணை குட்டைகள் மற்றும் நீர் தேக்கங்களில் பாதுகாப்பாக விடப்பட்டன. தால் ஏரியில் போதுமான நீர் இன்றி பரிதவித்த மீன்களை காப்பாற்ற களமிறங்கிய நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Tags : Tal Lake ,Himachal , Himachal, Taal Lake, Fish, Volunteers
× RELATED பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்ட நடிகை...