தேனி மாவட்டம் போடி அருகே மலைச்சாலையில் தொடர் நிலச்சரிவு!: தமிழகம் - கேரளா இடையே வாகன போக்குவரத்து முடங்கியது..!!

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே மலைச்சாலையில் தொடர் நிலச்சரிவு காரணமாக தமிழ்நாடு - கேரளா இடையிலான வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போடி மெட்டு மலைச்சாலை பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முந்தல் சோதனை சாவடியில் இருந்து கேரளா செல்லும் சாலையில் 8, 9  மற்றும் 10வது கொண்டை ஊசி வளைவுகள் அருகே பாறைகளும், மரங்களும் சாலையில் சரிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடிவார பகுதியான முந்தல் சோதனை சாவடியில் ஜீப்புகள் உள்பட 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

முந்தல் சோதனை சாவடியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 8, 9  மற்றும் 10வது கொண்டை ஊசி வளைவுகள் அருகே சரிந்து கிடக்கும் மரங்கள் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பாறைகள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: