×

ஓபிசி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு நாங்கள் வாதிட தயார்: உச்ச நீதிமன்றத்தில் திமுக தகவல்

புதுடெல்லி: ‘மருத்துவப் படிப்பில் ஓபிசி.க்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க தயாராக உள்ளோம்,’ என உச்ச நீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ‘மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஒபிசி. பிரிவுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்க கூடியதுதான். அதே நேரம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது?’ என கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், ஓபிசி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கையை திமுக தரப்பு கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தது. அதில், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கப்படும் 10 சதவீதம் இடஒதுக்கீடும், ஓபிசி.க்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீடும் வெவ்வேறு. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது,’ தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்,’ என கோரினார். அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘இந்த வழக்கில் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம். எங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : OBC ,Supreme Court , 27 per cent reservation for OBC we are ready to argue: DMK information in the Supreme Court
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...