×

சர்வதேச சந்தையில் விலையை கட்டுப்படுத்த சேமித்த கச்சா எண்ணெயை விடுவிக்கும் உலக நாடுகள்: அமெரிக்காவை தொடர்ந்து சீனா, ஜப்பான் தயார்; இந்தியாவும் 50 லட்சம் பேரலை விடுவிக்க திட்டம்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் விலையை கட்டுப்படுத்த, சேமித்து வைத்துள்ள கச்சா எண்ணெயில் ஒரு பகுதியை விடுவிக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்காவை தொடர்ந்து சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளன. இந்தியாவும் 50 லட்சம் பேரல்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பல நாடுகளிலும் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் பயன்பாடு முற்றிலும் குறைந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் உலக நாடுகள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளன. பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. அதோடு, கச்சா எண்ணெய் விலை எவ்வளவுக்கு எவ்வளவு வீழ்ச்சி அடைந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிகபட்சமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலரில் 82.50 (ரூ.6,100)ஐ தாண்டியது. கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், வரும் நாட்களில் அது அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்தது. இதன்படி, விலையை கட்டுக்குள் வைக்க ஒபெக் நாடுகள் தங்களின் சேமிப்பு இருப்பில் உள்ள கச்சா எண்ணெயை விடுவிக்க வேண்டுமென அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி குறைவதால், விலை உயராமல் கட்டுப்படுத்த முடியும். அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது.

நேற்று 75.84 டாலராக (ரூ.5,615) குறைந்தது. அமெரிக்கா தனது சேமிப்பு கிடங்கில் இருந்து 5 கோடி பேரல்களை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக அதிபர் பைடன் நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்காவை பின்பற்றி, அதன் நட்பு நாடுகளான  ஜப்பான், இந்தியா, தென் கொரியா போன்றவையும் சேமிப்பு இருப்பில் இருந்து கச்சா எண்ணெய் விடுவிக்க ஆலோசித்து வருகின்றன. கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனாவும் இதற்கு சம்மதித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில், 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விடுவிக்கப்படும் என உயர் அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த நடவடிக்கை 7 முதல் 10 நாட்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

* 3 இடங்களில் பூமிக்கு அடியில் சேமிப்பு குகை
போர் போன்ற அவசர காலங்களில், திடீர் தேவை ஏற்பட்டாலோ, கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டாலோ அவசர தேவைக்கு பல லட்சம் டன்கள் கச்சா எண்ணெயை பூமிக்கடியில் சேமித்து வைக்கும் வழக்கத்தை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. கடந்த 1990ம் ஆண்டு வளைகுடா போர் நடந்தது. அப்போது, இந்தியாவின் கைவசம் இருந்த பெட்ரோலிய பொருட்கள், 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால், இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதுபோன்ற நிலைமையை சமாளிக்க, சுரங்கம் தோண்டி குகை போன்ற அமைப்பில் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கும் வழக்கத்தை இந்தியா கொண்டு வந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை குறையும் போது வாங்கி இந்த சேமிப்பு கிடங்குகள் நிரப்பப்படும்.

* இந்தியா விரும்பாவிட்டாலும், அமெரிக்காவின் அழுத்தத்தால் வேறு வழியின்றி குறைந்த அளவிலான கச்சா எண்ணெய்யை விடுவிப்பதாக கருதப்படுகிறது.

* அமெரிக்கா அதிகம்
இந்தியாவின் சேமிப்பு கிடங்கில் 3.8 கோடி பேரல் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின்  சேமிப்பு இருப்பில் 71 கோடி பேரல்கள் உள்ளன. சீனா 47 கோடி, ஜப்பான் 32 கோடி பேரல் கச்சா எண்ணெயை சேமித்து வைத்துள்ளன.

* ‘பயன் இல்லை’
ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பேட்டியில், ‘‘விலையை கட்டுப்படுத்த இதுபோன்ற சூழலில் கச்சா எண்ணெயை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படவில்லை. நிலநடுக்க பேரழிவு, கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தம் போன்ற அவசர காலங்களில் பயன்படுத்துவதே சேமிப்பு கிடங்கின் நோக்கம். சேமிப்பு கிடங்கில் இருந்து கச்சா எண்ணெய் விடுவிப்பது தற்காலிக தீர்வை தந்தாலும் பின் மீண்டும் விலை உயர்வை தடுக்க முடியாது,’’ என்றார்.


Tags : China ,Japan ,US ,India , World powers to release stored crude oil to control prices in international markets: China, Japan ready to follow US; India also plans to release 50 lakh barrels
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...