×

மெரினா கடற்கரையில் தடையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

சென்னை: தடையை மீறி மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். சென்னையின் முக்கிய போக்குவரத்து தடமான அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, அடையாறு சர்தார் படேல் சாலை மற்றும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை உள்ளிட்ட புறநகர் சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலை ஆகியவற்றில் இளைஞர்கள் பலர் அவ்வப்போது பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா காவல் நிலைய போலீசார் ேநற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிவேகமாகவும், அதிக ஒலியுடன் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலையின் இடையே தடுப்புகளை அமைத்து, பைக்குகளில் வேகமாக வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அப்போது, ஒரே பைக்கில் 3 பேர் என 7 பைக்கில் 21 பேர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, பைக் ரேசில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, பைக் ஓட்டி வந்த 7 வாலிபர்கள் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டியது, 3 பேருக்கு மேல் பயணம் செய்தது மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் வாகனங்களில் சரியான பதிவு எண்கள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த 8 வாகனங்களை போலீசார் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.

Tags : Marina Beach , Case filed against 7 persons involved in bike race violating the ban at Marina Beach: Seizure of vehicles
× RELATED நாளை மறுநாள் முதல் கலைஞர் உலகத்திற்கு அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு