அரசு மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பெருநகர் மாதிரி பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர்,அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜனவரி 2021ல் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்காக ஒன்றிய அரசின் அடல் இந்நோவேஷன் மிஷன் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அடல் டிங்கரிங் ஆய்வகம் மூலமாக மாணவர்கள் தங்கள் புதுமையான நோக்கங்கள், கருத்துக்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வாய்ப்புகளை வழங்கும் ஒரு தளமாக இந்த அடல் டிங்கரிங் ஆய்வகம் செயல்படும்.

இங்கு மாணவர்கள் தங்களின் புதுமையான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஏதுவாக அறிவியல் ரோபோடிக்ஸ், மைக்ரோ கண்ட்ரோல் போர்டு சென்சார்ஸ், 3டி பிரின்டர்ஸ், கணினிகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பெருநகர் மாதிரி பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அங்கு, மாணவர்கள் அறிவியல், இன்ஜினியரிங், தொழில்நுட்பம், கணிதம் ஆகியவற்றை கற்றுக் கொள்ள உதவுகிறது.

இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக வைக்கப்பட்டு இருந்த அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் செயல்முறை விளக்கம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான 2 நாள் பயிற்சி முகாமை ஆய்வு செய்து, ஆசிரியர்கள் ,  தன்னார்வலர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து, திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடக்குரும் ஸ்மார்ட் கிளாசை ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த இளம் மாணவிகளிடம் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அங்கு க்யூஆர் கோடு முறையில் கல்வி கற்கும் மாணவர்களின் திறமையை கண்டு வியப்படைந்தார். நிகழ்ச்சியில், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலரசன், தொடக்கப்பள்ளி இயக்குனர் அறிவொளி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் மலர்விழி குமார், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எம்.குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: