சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கமல் வெளியிட்ட டிவிட்டரில், அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சென்னை தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பதிவிட்டிருந்தார். கமலுக்கு சுவாசப்பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கமல் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கமல் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவரிடம் செல்போனில் பேசி நலம் விசாரித்தார். விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரிடம் ரஜினி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் ஏ.சி.சண்முகம், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சந்தானபாரதி, லோகேஷ் கனகராஜ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரபு, சரத்குமார், விஷ்ணு விஷால், ராதாரவி, பஹத் பாசில் உள்பட பலர் கமல் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.