×

தமிழகத்துக்கான மத்திய தணிக்கை குழு; ஆலோசகர்களாக அசோக்வரதன் ஷெட்டி, ஜாங்கிட் நியமனம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் முதல் கூட்டம்

சென்னை: தமிழகத்துக்கான மத்திய தணிக்கை குழுவின் ஆலோசகர்களாக முன்னாள் அதிகாரிகள் அசோக்வரதன் ஷெட்டி, ஜாங்கிட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மத்திய, மாநில அரசுகளின் செலவுகள், திட்டங்கள் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்யும். இந்தக் குழு அனைத்து துறைகளிலும் உள்ள திட்டங்களை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கையில்தான் எந்தெந்த துறையில் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் எந்த துறைகளில், எந்த திட்டங்களில் நடந்துள்ளது என்பதை விரிவாக தெரிவிப்பார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார துறையில் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய மத்தியில் தனியாக தணிக்கை குழுவும், மாநில அரசின் திட்டங்களை ஆய்வு தனியாக மாநிலக் குழுவும் உள்ளது.

தற்போது தமிழகத்தில் தணிக்கை குழு அதிகாரியாக அம்பலவாணன் உள்ளார். இந்தநிலையில், தற்போது இந்த குழுவில் எந்தெந்த துறைகளில் எப்படி திட்டங்களை ஆய்வு செய்வது,  எந்த திட்டங்களை ஆய்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை வழங்க, தற்போது புதிதாக 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி, முன்னாள் டிஜிபி ஜாங்கிட், வருமான வரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் ராஜேந்திரன், மேற்கு வங்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தணிக்கை குழுவின் அதிகாரி அம்பல வாணன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Central Audit Committee for Tamil Nadu ,Ashokvarathan Shetty ,Jangit ,Finance Minister ,Palanivel Thiagarajan , Central Audit Committee for Tamil Nadu; Appointment of Ashokvarathan Shetty and Jangit as Advisers: First meeting chaired by Finance Minister Palanivel Thiagarajan
× RELATED மாஜி டிஜிபி ஜாங்கிட் மீது வழக்கு...