×

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்தது. ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

Tags : Vedha Nilayam ,Chief Minister ,Jayalalithaa , Judgment today in the Vedha Nilayam case where the late former Chief Minister Jayalalithaa lived
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...